search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி கொலை"

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மாமியாரை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டியது ஏன்? என்று கைதான மருமகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சித்தூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வெடிக்காரன்பாளையம் கிராமத்தில் உள்ள சென்றாயன்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி மாதம்மாள் (வயது 50).

    இந்த தம்பதியினருக்கு ராமர் என்ற மகனும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். மகள் லட்சுமி திருமணம் முடிந்து கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மகன் ராமருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி(21) என்ற மனைவி உள்ளார்.

    கடந்த 18-ந்தேதி இரவு வீட்டில் மாதம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இன்சூரன்ஸ் பணத்துக்காக மாமியாரை, மருமகள் ராஜேஸ்வரி கொலை செய்திருப்பதும், இதற்கு உடந்தையாக ஈஸ்வரன்(24), தனபால் (21) ஆகிய 2 வாலிபர்கள் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    ராஜேஸ்வரி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை பகுதி ஆகும். புதன் சந்தை பகுதியில் உள்ள பேக்கரி கடையில் மாதம்மாளின் மகன் ராமர் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது தான் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்தோம்.

    இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது. நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போல் புதன் சந்தை பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தோம்.

    எனது மாமனார் கோவிந்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் மாமியார் மாதம்மாள் தனது சொந்த ஊரான சென்றயான்காடு பகுதியில் புதிதாக வீடுகட்டி, தனியாக வசித்து வந்தார்.

    ராமர் சமீபத்தில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கி உயிர் இழந்தார். இந்த விபத்து தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளது. இதன்மூலம் ராமரின் வாரிசுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராமர் விபத்தில் இறந்ததற்காக கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை முழுவதையும் தானே அடைய வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆகவே வாரிசு சான்று பெற்றுள்ள ராமரின் தாயார் மாதம்மாளை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.

    இதற்காக ஏற்கனவே மாதம்மாளிடம் இட பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாலு என்கிற ஈஸ்வரன் மற்றும் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் மாதம்மாளிடம் முன் விரோதம் கொண்டிருந்த தனபால் ஆகியோரை அணுகி, மாதம்மாளை கொலை செய்தால் தனக்கு இழப்பீட்டுத்தொகை முழுவதும் கிடைக்கும் என்றும், அதில் ஒருபகுதியை உங்களுக்கு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி அவர்களை கொலை செய்ய தூண்டினேன்.

    இதனிடையே நானும் ராமர் தான் எனது கணவர் என்று வாரிசு சான்று பெற்றுள்ளேன்.

    இந்த நிலையில் நாங்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த 18-ந் தேதி இரவு மாதம்மாளை கொலை செய்தோம்.

    இவ்வாறு ராஜேஸ்வரி போலீசில் வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

    அதுபோல் கைதான ஈஸ்வரன், தனபால் ஆகியோர் கூறியதாவது:-

    மாதம்மாளின் உறவுக்காரர்களான நாங்கள் அவரது வீடு இருக்கும் பகுதியில் வசித்து வருகிறோம். புதன் சந்தை பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்த மாதம்மாளின் மகன் ராமரை சந்திக்க, நாங்கள் இருவரும் அடிக்கடி புதன்சந்தை பகுதிக்கு செல்வோம்.

    அப்போது அவருடன் குடும்பம் நடத்தி வந்த ராஜேஸ்வரிக்கும், எங்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் மாதம்மாளிடம் பேசுவதில்லை. இருந்தும் அவரது மகனான ராமரை அடிக்கடி சந்திப்போம். அவர் இறந்ததும் அதற்கான இன்சூரன்ஸ் தொகையில் ஒரு பகுதியை எங்களுக்கு தருவதாகவும் ராஜேஸ்வரி ஆசை காட்டினர். ஏற்கனவே மாதம்மாள் மீது கோபத்தில் இருந்த நாங்கள் இதற்கு சம்மதித்தோம்.

    சம்பவத்தன்று இரவு சென்றாயன்காடு பகுதிக்கு வந்த ராஜேஸ்வரி, மாதம்மாள் வீட்டின் அருகில் சென்று பதுங்கி கொண்டு எங்களுக்கு தகவல் தெரிவித்தார். இரவு ஆள் நடமாட்டம் குறைந்த பிறகு மாதம்மாள் வீட்டிற்குள்ள நுழைந்த நாங்கள், அவரை அமுக்கி பிடித்து, மூச்சைத் திணறடித்து கொன்றோம்.

    மாதம்மாள் இறந்து போனதை உறுதி செய்து கொண்ட நாங்கள் அவர் அணிந்திருந்த தங்கதோடு உள்ளிட்ட தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி வந்தோம். அருகில் பதுங்கி இருந்த ராஜேஸ்வரியிடம் நடந்த விபரத்தை கூறினோம்.

    வழக்கு செலவுக்கு பணம் தேவையாக இருப்பதால் இந்த தங்க நகைகளை ராஜேஸ்வரி வாங்கிகொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    நாங்களும் ஒன்றும் நடக்காதது போல் எங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் துப்புத் துலக்கி எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் போலீசில் கூறியுள்ளனர்.

    கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
    எடப்பாடி அருகே கறிக்கடை ஊழியர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுத் தெருவில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி, மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது55). கூலித்தொழிலாளி. இவருக்கு சத்தியமூர்த்தி(28) என்ற மகனும், சத்யா (20) என்ற மகளும் உள்ளனர்.

    சத்திய மூர்த்தி நடைபாதை ஓரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சத்யா படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்யா அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தை கார்த்திகேயன் குடும்பத்தினர் ரகசியமாக வைத்திருந்தனர்.

    இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த கறிக்கடை ஊழியர் சரவணன்(45) என்பவர் சத்யா காதல் திருமணம் செய்து கொண்டது குறித்து பலரிடம் கூறிவந்ததாக தெரிகிறது. இதனால் சரவணனை சத்தம் போடுவதற்காக கார்த்திகேயன் மற்றும் அவரது மகன் சத்திய மூர்த்தி ஆகியோர் நேற்றிரவு அவரை தேடி சென்றனர்.

    அப்போது மேட்டுத்தெரு தனியார் பள்ளி முன்பு சரவணன் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் தடுத்து நிறுத்தி, சத்யா பற்றி ஏன் எல்லோரிடமும் சொல்கிறாய்? என கூறி சத்தம் போட்டனர். மேலும் ஏன் இவ்வாறு செய்கிறாய்?, இனிமேல் இப்படி கூறாதே என்று சொல்லி தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் கத்தியை எடுத்து கார்திகேயனையும், சத்தியமூத்தியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. தங்களை தாக்கியதால் கோபம் அடைந்த சத்திய மூர்த்தி அருகில் கிடந்த கட்டையை எடுத்துவந்து சரவணனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் தலை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சம்பவ இடத்திலேயே சரவணன் சுருண்டு விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கத்திக்குத்தில் காயமடைந்த கார்த்திகேயனும், சத்தியமூர்த்தியும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட சரவணன், கார்த்திகேயனின் அக்காள் மகன் ஆவார். கறிக்கடை ஊழியர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுத் தெருவில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    ×